சேலத்தில் துப்பாக்கி தயாரித்து கைதான இரு இளைஞர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

சேலம்: சேலத்தில் துப்பாக்கி தயாரித்து கைதான இளைஞர்கள் இருவரை என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓமலூரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்ரவர்த்தியிடம் இருந்து துப்பாக்கியை கைப்பற்றி கைது செய்தனர். போலீஸார் தொடர் விசாரணையில், இவர்கள் சேலம் செட்டிச்சாவடி பகுதியில் வீட்டில் துப்பாக்கி தயாரித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேரில் வந்து துப்பாக்கி தயாரித்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

மேலும், சிறையில் உள்ள சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தியை காவலில் எடுத்து விசாரிக்க, உயர் நீதி மன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் மனு செய்திருந்தனர். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இருவரையும் 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, என்ஐஏ அதிகாரிகள் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ஐஏ எஸ்.பி ஸ்ரீஜித் தலைமையிலான எட்டு பேர் கொண்ட அதிகாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) இருவரையும் சேலம் அழைத்து வந்தனர். அவர்களை ஓமலூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனம், அவர்கள் பிடிபட்ட இடத்துக்கு இருவரையும் அழைத்து சென்று என்ஐஏ அதிகாரிகள் விசாரித்தனர்.

சேலம் செட்டிச்சாவடியில் அவர் வசித்த வீட்டுக்கும் அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துப்பாக்கி தயாரித்த வீட்டின் உரிமையாளர் யார், யார் மூலமாக இவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டது, துப்பாக்கி தயாரிக்க பணம் வழங்கியது யார், துப்பாக்கி எந்த ரகத்தை சேர்ந்தது உள்பட பல்வேறு கோணங்களில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in