

ஈரோடு அருகே 16 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் கைதான பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் வீரப்பாளையம் ஆனைமலை ஏஜென்சி அருகே கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி பெண் ஒருவர் போதைப்பொருளை கடத்தி வர உள்ளதாக, போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு சென்ற போலீஸார், சந்தேகத்துக்கு இடமாக யாரேனும் வருகிறார்களா என கண்காணித்து வந்தனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த பெண் ஒருவர், வாகனத்தின் முன்பகுதியில் காலுக்கடியில் பிளாஸ்டிக் சாக்குப்பை ஒன்றை எடுத்து வந்துள்ளார்.
அவரை தடுத்து நிறுத்தி விசாரித்த போலீஸார், அந்த பையை சோதனையிட்டனர். அப்போது, பையில் 16 கிலோ கஞ்சா இருப்பதும், கடத்தி வந்தவர் ஈரோடு பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்த பூங்கோதை (40) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி என்.லோகேஸ்வரன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், பூங்கோதைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர் வெ.சிவகுமார் ஆஜரானார்.