

சென்னை: சென்னை கடற்கரை நிலையம் - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயிலில் கடந்த 23-ம் தேதி இரவு பாதுகாப்புப் பணியில் இருந்த ஆர்.பி.எஃப். பெண் காவலர் ஆசிர்வா(29), மகளிர் பெட்டியில் ஏற முயன்ற ஒருவரைத் தடுத்தபோது, அந்நபர் ஆசிர்வாவை கத்தியால் குத்திவிட்டு, தப்பியோடிவிட்டார்.
இதில் காயமடைந்த ஆசிர்வாவுக்கு, பெரம்பூர் ரயில்வே மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆசிர்வாவைக் குத்தியவர் மீது எழும்பூர் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே காவல் அதிகாரிகள் கூறும்போது, “ஆர்.பி.எஃப். பெண் காவலரைக் குத்தியவரைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து, அதனடிப்படையில் விசாரித்து வருகிறோம். விரைவில் குற்றவாளியைக் கைது செய்வோம்” என்றனர்.