

சென்னை: முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த இளைஞரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை எழும்பூரில் உள்ள தமிழக காவல் துறையின் தலைமைகட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 12.35 மணியளவில் அழைப்பு வந்தது.
எதிர்முனையில் பேசிய நபர், சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சற்று நேரத்தில் வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.
தீவிர சோதனை
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கட்டுப்பாட்டு அறை காவலர்கள், உடனடியாக இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து முதல்வர் வீட்டில் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் பிரிவினர், மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தினர்.
பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்தவெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த தொலைபேசி அழைப்பில் மர்ம நபர் பேசியிருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து,சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் மிரட்டல் அழைப்பு விடுக்கப்பட்ட செல்போன் எண்ணை அடிப்படையாக வைத்து துப்பு துலக்கினர்.
மனநலம் பாதிக்கப்பட்டவரா?
விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன்(25) என்பதும், சிறிது மனநலம் பாதிக்கப்பட்ட அவர் மீது ஏற்கெனவே சென்னையில் பிரபல நடிகர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக வழக்கு இருப்பதும், அவர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.
மேலும் புவனேஸ்வரன், நேற்றுமுன்தினம் வேறு ஒருவரின் செல்போன் மூலம் முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக புவனேஸ்வரனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஆழ்வார்பேட்டை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.