

காந்திநகர்: தன்னுடைய கட்டை விரல் தோலை நீக்கி நண்பனின் விரலில் ஒட்டி, தனக்கு பதில் நண்பனைத் தேர்வு எழுத அனுப்பியது அம்பலமாகி பிஹாரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், குஜராத் மாநிலம் வடோதரா பகுதி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில், ரயில்வே துறையினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்று, "குரூப் டி" பணிகளுக்கான தேர்வினை திங்கள்கிழமை (ஆக.22) நடத்தியது. இந்த தேர்வு, வதோதராவில் உள்ள லக்ஷ்மிபுரா என்ற பகுதியில் நடந்தது. தேர்வின்போது தேர்வர்கள் அனைவரது கட்டைவிரல் ரேகையும் பயோமெட்ரிக் முறையில் பரிசோதிக்கப்பட்டு, அவை ஆதார் தரவுகளுடன் சரிபார்க்கப்பட்ட பின்னரே தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது. தேர்வில் எந்த வித மோசடியும் ஆள்மாறாட்டமும் நடைபெறாமல் இருக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில், தேர்வு எழுத வந்தவர்களில் ஒருவர் தனது இடது கையை தனது பேன்ட் பாக்கெட்டினுள் மறைத்து வைத்திருந்ததை பார்த்து சந்தேகம் அடைந்த தேர்வு கண்காணிப்பாளர், அவரின் கைகளில் சானிட்டைசர் தெளித்து கைகளை சுத்தம் செய்த பின்னர், இடது கை கட்டை விரலை பயோமெட்ரிக் பரிசோதனைக்குட்படுத்த சொல்லியிருக்கிறார்.
பல முயற்சிக்கு பின்னரும் மணிஷ்குமார் என்ற அவரின் ஆதார் அடையாளத்துடன் விரல் ரேகை ஒத்துப்போகவில்லை. அது குறித்து வந்தவரிடம் விபரம் கேட்ட தேர்வு நடத்திய தனியார் நிறுவனத்தினர் உடனடியாக காவல்து றையில் புகார் அளித்தனர்.
காவல் துறையினரின் விசாரணையில், தேர்வு எழுத வந்தவரின் பெயர் ராஜ்யகுரு குப்தா என்பதும், அவர் தனது நண்பன் மணிஷ்குமாருக்காக ரயில்வே தேர்வு எழுத வந்திருப்பதும், இருவரும் பிஹார் மாநிலம் முங்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.
மேலும், ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மணிஷ் குமார், தனக்கு பதிலாக நன்றாக படிக்கும் தன்னுடைய நண்பன் ராஜ்யகுரு குப்தாவை தேர்வெழுத அனுப்ப தீர்மானித்துள்ளார். தேர்வின் போது தேர்வர்களின் கைரேகை சோதிக்கப்படும் என்பதை அறிந்திருந்த மணிஷ் தேர்வுக்கு முந்தைய நாள் தனது இடது கை கட்டை விரலை சூடான ஃபேன் மீது வைத்து கொப்பளத்தை உருவாக்கி, கொப்பளத்தின் தோலினை அறுத்து அதனை ராஜ்யகுருவின் கட்டை விரலில் ஒட்டி தேர்வு எழுத அனுப்பியதும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து ஏமாற்றுதல் மற்றும் மோசடியில் ஈடுபடுதல் போன்ற குற்றங்களு்காக இளைஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக, வதோதரா கூடுதல் காவல் ஆணையர் தெரிவித்தார்.