கள்ளக்குறிச்சி சிவன் கோயிலில் திருடுபோன சோழர்கால பஞ்சலோக சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு: 900 ஆண்டுகள் பழமையானவை என தகவல்

கள்ளக்குறிச்சி சிவன் கோயிலில் இருந்து திருடுபோன சோழர்கால பஞ்சலோக சிலைகள்.
கள்ளக்குறிச்சி சிவன் கோயிலில் இருந்து திருடுபோன சோழர்கால பஞ்சலோக சிலைகள்.
Updated on
1 min read

சென்னை: கள்ளக்குறிச்சி சிவன் கோயிலில் திருடுபோன சோழர்கால பஞ்சலோக சிலைகள் அமெரிக்காவில் இருப்பதை, தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். 900 ஆண்டுகள் பழமையான அந்த சிலைகளை மீட்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் கிராமத்தில் திரிபுராந்தகம், திரிபுரசுந்தரி மற்றும் நாரீஸ்வர சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த 6 பஞ்சலோக சிலைகள் 30 ஆண்டுகளுக்கு முன் திருடுபோனது. இதுதொடர்பாக 2018-ல் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் புகார் அளித்தார்.

அதன்படி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி, ஐ.ஜி. தினகரன் உத்தரவின் பேரில், டிஎஸ்பி முத்துராஜா தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இக்கோயில் 900 ஆண்டுகளுக்கு முன், சோழ மன்னர் ராஜேந்திரனால் கட்டப்பட்டது. இங்கு திருடுபோன நடராஜர், வீணாதாரி தட்சிணாமூர்த்தி, சுந்தரர், ராஜேந்திரர் மனைவி பரவை நாச்சியாருடன் உள்ள சிலை, திரிபுராந்தகம் மற்றும் திரிபுரசுந்தரி ஆகிய 6 சிலைகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

மீட்டுவர நடவடிக்கை

இதில், வீர சோழபுரம் கிராமத்தில் உள்ள நாரீஸ்வர சிவன் கோயிலில் இருந்து காணாமல்போன 6 சிலைகளும், தற்போது அமெரிக்காவின் பல்வேறு அருங்காட்சியகங்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், 6 பஞ்சலோக சிலைகளையும் மீட்டு தமிழகத்துக்குக் கொண்டு வர, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். திருடுபோன இந்த சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in