வெள்ளகோவில் அருகே மகன், மகளை அடித்து கொன்று தாய் தற்கொலை

வெள்ளகோவில் அருகே மகன், மகளை அடித்து கொன்று தாய் தற்கொலை
Updated on
1 min read

வெள்ளகோவில் அடுத்த ஓலப்பாளையம் அத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் கனகசம்பத் (46). விவசாயி. இவருடைய மனைவி பேபி (எ) ரேவதி (39). இவர்களது மகள் ஹர்சிதா (12), மகன் கலைவேந்தன் (7). ஹர்சிதா 8-ம் வகுப்பும், கலைவேந்தன் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

கடுமையான தலைவலியால் ரேவதி அவதிப்பட்டு வந்துள்ளார். வலி அதிகமாகும்போது, மனநலம் பாதிக்கப்பட்டவர்போல நடந்து கொள்வாராம்.

நேற்று முன்தினம் தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஊரை ஒட்டியுள்ள தனது தோட்டத்து வீட்டுக்கு ரேவதி சென்றார். கடை வீதிக்கு சென்றிருந்த கனகசம்பத், தோட்டத்துக்கு வீட்டுக்கு திரும்பினார். அங்குவீட்டின் கதவு உள்புறமாக பூட்டியிருந்தது.

ஜன்னல் வழியே அவர் பார்த்தபோது குழந்தைகள் இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். கட்டிலில் மயங்கிய நிலையில் ரேவதி கிடந்தார்.

குழந்தைகளின் அருகே இரும்புக் கம்பியும், ரேவதியின் அருகே விஷ பாட்டிலும் கிடந்தது.அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து கனகசம்பத் உள்ளே சென்றார். அப்போது, குழந்தைகளை இரும்புக் கம்பியால் தாக்கி கொன்றுவிட்டு, தானும் விஷம் குடித்ததாக ரேவதி தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட 3 பேரும், காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரேவதியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக வெள்ளகோவில் காவல் ஆய்வாளர் ரமாதேவி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in