

மிளகாய்ப் பொடி தூவி நிதி நிறுவன அதிபரை கடத்திய கும்பலை வெப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.
குமாரபாளையம் அருகே பாதரையைச் சேர்ந்தவர் கவுதம் (35). இவர் பாதரை அருகே வெப்படையில் கடந்த 6 ஆண்டுகளாக நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வீட்டருகே சென்றபோது அங்கு காருடன் நின்றிருந்த மர்மகும்பல், கவுதமை தாக்கி மிளகாய்ப் பொடி தூவி, அவரை இரு சக்கர வாகனத்துடன் காரில் கடத்திச் சென்றனர்.
இதுகுறித்து அவரது மனைவி திவ்யா அளித்த புகாரின்பேரில் வெப்படை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி, அங்கு கைப்பற்றப்பட்ட கவுதமின் காலணி, ரத்தக்கறை, உடைந்த கண்ணாடி உள்ளிட்டவற்றை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும், கவுதமை மீட்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட கவுதம் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகியாக உள்ளார். இதனால் அக்கட்சியினர் வெப்படை காவல் நிலையம் முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.