

சென்னை அரும்பாக்கம் பெடரல் வங்கியின் நிதி நிறுவனத்தில் 481 வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த ரூ.15 கோடி மதிப்பிலான 31.7 கிலோ தங்க நகைகள் கடந்த 13-ம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை தொடர்பாக அரும்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனிப்படை அமைத்து, கொள்ளை கும்பலை கைது செய்தனர். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளையும் பத்திரமாக மீட்டனர்.
கொள்ளையடித்த நகைகளை வீட்டில் வைத்திருந்த அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் அமல்ராஜ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கொள்ளை திட்டத்துக்கு முளையாக செயல்பட்ட வங்கியின் முன்னாள் ஊழியர் முருகனை, இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது அவருடைய நண்பன் கேபிரியல் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து வில்லிவாக்கத்தை சேர்ந்த அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இதன்மூலம் இந்த கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.