

புதுடெல்லி: பாகிஸ்தானிலிருந்து 1998-ல் இந்தியாவுக்கு வந்தவர் பாக்சந்த். தன் குடும்பத்துடன் இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்தவர், 2016-ல் இந்திய குடியுரிமை பெற்று டாக்ஸி டிரைவராகவும், கூலித் தொழிலாளியாகவும் இந்தியாவிலேயே வேலை பார்க்கத் தொடங்கினார்.
46 வயதான பாக்சந்த், டெல்லியில் உள்ள சஞ்சய் காலனி பட்டி மைன்ஸ் பகுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தகாக அண்மையில் இவரை ராஜஸ்தான் போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து ராஜஸ்தான் போலீஸ் டிஜிபி (உளவு) உமேஷ் மிஸ்ரா கூறும்போது, ‘‘பாகிஸ்தானுக்காக இவர் இந்தியாவில் உளவு பார்த்து பல தகவல்களைத் தெரிவித்துள்ள விஷயம் எங்களுக்குத் தெரிய வந்தது. கடந்த 3 அல்லது 4 வருடங்களாக இந்த உளவு வேலையை அவர் செய்து வந்துள்ளதும், இதற்காக இவர் ஏராளமான பணத்தைப் பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. ராஜஸ்தானின் பில்வாரா பகுதியில் கடந்த 14-ம் தேதி பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக நாராயண் லால் கத்ரி கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின்படி பாக்சந்த் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். 27 வயதாகும் கத்ரி தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்’’ என்றார்.