மேட்டுப்பாளையம் | மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மீது ஆசிட் வீச்சு - போலீஸார் விசாரணை

அமில வீச்சில் காயப்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கும் கால்நடைத்துறையினர். அதன் உரிமையாளரிடம் விசாரிக்கும் போலீஸார்.
அமில வீச்சில் காயப்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கும் கால்நடைத்துறையினர். அதன் உரிமையாளரிடம் விசாரிக்கும் போலீஸார்.
Updated on
1 min read

கோவை: மேட்டுப்பாளையத்தில் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மீது ஆசிட் அமிலம் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். அதேபோல், பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு கால்நடைத் துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவை மேட்டுப்பாளையம், கல்லாறு ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். விவசாயி. இவர், தனது தோட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட பசு மற்றும் எருமை மாடுகளை வளர்த்து வருகிறார். தினமும் அதிகாலையில், அங்குள்ள பவானிக்கரையோர பகுதிகள் மற்றும் மலையடிவாரப் பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு செல்லும் இம்மாடுகள், மாலை நேரத்தில் தோட்டத்துக்கு திரும்பி விடுவது வழக்கம்.

அதன்படி, இரு தினங்களுக்கு முன்னர் காலை மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மாலை வீடு திரும்பின. அதில் 4 பசு மாடுகள் மற்றும் 36 எருமை மாடுகள் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டன. இதையறிந்த ராஜ்குமார், அவற்றின் அருகே சென்று பார்த்தார். அப்போது 4 பசு மாடுகள், 36 எருமை மாடுகளின் உடலின் மீது கொப்பளங்கள் காணப்பட்டன. முதலில் வெயிலின் தாக்கத்தால் கொப்பளங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என அவர் நினைத்தார்.

ஆனால், நேற்று (ஆக.21) பார்த்தபோது, மாடுகளின் தோல் கருகி அவை உரிந்து காணப்பட்டதுடன், உடல் முழுவதும் பலத்த காயங்கள் இருந்தன. மேலும், அவை உணவு ஏதும் உண்ண மறுத்து வலியால் கத்திக் கொண்டே இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் கால்நடை மருத்துவர்களுக்கு தெரிவித்தார். அவர்கள் வந்து பார்த்த போது, மாடுகளின் மீது ஆசிட் அமிலம் வீசப்பட்டதால் அவற்றின் தோல்கள் உரிந்து, கொப்பளங்கள் ஏற்பட்டது தெரியவந்தன.

இதைத் தொடர்ந்து மேற்கண்ட சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீஸில் ராஜ்குமார் புகார் அளித்தார். அதில், 'தனது தோட்டத்துக்கு அருகேயுள்ள நர்சரியை சேர்ந்த ஒருவர், சமீபத்தில் எனது மாடுகள் அவரது நர்சரியில் நுழைந்து சேதத்தை ஏற்படுத்திவிட்டது, அதற்காக இழப்பீடாக ரூ.30 ஆயிரம் தர வேண்டும் என கேட்டார். நான் பணம் தர மறுத்ததால், அவர் தனது மாடுகள் மீது அமிலத்தை வீசியிருக்க வாய்ப்புகள் உள்ளது. அவரிடம் போலீஸார் விசாரிக்க வேண்டும்'' எனத் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுபுறம், மண்டல கால்நடை மருத்துவத் துறை இணை இயக்குநர் பெருமாள்சாமி தலைமையிலான கால்நடை மருத்துவக்குழுவினர், பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தடிமனான மாடுகளின் தோல் வெந்துள்ளது என்றால், வீரியம்மிக்க ஆசிட் அமிலம் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் கால்நடைத்துறையினர், தொடர் சிகிச்சையின் மூலம் மாடுகளின் உயிரை காப்பாற்ற வாய்ப்புள்ளதாக ராஜ்குமாரிடம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in