Published : 22 Aug 2022 03:34 PM
Last Updated : 22 Aug 2022 03:34 PM

40+ வயதினர்தான் இலக்கு: ஆண்களைக் குறிவைக்கும் ஆன்லைன் பாலியல் மிரட்டல்களின் பின்னணி

புதுடெல்லி: 40 வயதைக் கடந்த ஆண்களை குறிவைத்து ஆன்லைனில் பாலியல் மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும் மோசடிகள் அதிகரித்து வருவது தலைநகர் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்தவர் ராகேஷ் (60) இவருடைய வாட்ஸ் அப் அழைப்பில், "நீங்கள் தனியாக இருக்கிறீர்களா..அப்படியிருந்தால் எனக்கு வீடியோ கால் செய்யுங்கள்" என ஒரு பெண்ணிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வருகிறது. அதனைத் தொடர்ந்து அவரும் அந்தக் குறுஞ்செய்தியில் உள்ள லிங்கை க்ளிக் செய்து வீடியோ காலை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் சில நிமிடங்களில் அந்த வீடியோ கால் துண்டிக்கப்படுகிறது. அதன் பிறகு அவர் தோன்றிய வீடியோவை வைத்து ஒருவரால் மிரட்டப்படுகிறார். ரூ 80,000 கொடுக்கவில்லை என்றால் இந்த வீடியோவை சமூக ஊடகத்திலும், உங்கள் குடும்பத்தாரிடமும் அளிப்போம் என மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர் அப்பணத்தை வழங்குகிறார்.

இந்த நிலையில், டெல்லி காவல் துறையின் குற்றப்பிரிவு அதிகாரி மற்றும் யூடியூப் அதிகாரி என இரண்டு பேர் ஆள்மாறாட்டம் செய்து வாட்ஸ்அப் வீடியோவில் அவரை அழைத்து ₹6.50 லட்சம் கேட்டுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்ய ராகேஷ்க்கு இரண்டு மாதங்கள் தேவைப்பட்டிருக்கிறது. அவர் அளித்த புகார் தொடர்பாக 284,170,419,420, 120b, 33, ஆகிய தண்டனைப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சைபர் செல்லின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஆண்கள் பலரும் இணையத்தில் பாலியல் சுரண்டலுக்கு ஆளக்கப்பட்டு, மிரட்டப்பட்டு தங்கள் பணத்தை இழந்துள்ளனர். இணையத்தில் நடக்கும் இந்தப் பாலியல் துன்புறுத்தல் கரோனா காலத்தில் இரட்டிப்பாகி உள்ளது. கரோனாவுக்கு முன்னர் மாதத்துக்கு ஒன்று அல்லது இரண்டு வழக்குகள் வந்தன. தற்போது வழக்கு எண்ணிக்கை 8 முதல் 9 ஆகி உள்ளது. ஒருவேளை தங்கள் விவரம் தெரிந்தால் சமூகத்தை எதிர்கொள்வது எப்படி என்ற தயக்கத்தால் தங்களால் புகாரளிக்க முடியவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 100 வழக்குகளில், குறைந்தது 85 பாதிக்கப்பட்டவர்கள் அழைப்புகளுக்கு பதிலளிக்கின்றனர். இதில் 70 பேர் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள்.

சமூக வலைதளங்களில் நட்பு ரீதியில் உரையாடுபவர்களை இம்மாதிரியான குழுக்கள் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். நீங்கள் எதைப் பேசுகிறீர்கள், உங்கள் வாழ்கை முறை எப்படி உள்ளது, உங்களுக்கு வரும் லைக் கமென்ட்களை அவர்கள் கண்காணிக்கிறார்கள். மேலும், உங்களிடம் நிலையாக பணம் புழங்குகிறதா என்றும் அவர்கள் கண்காணிக்கிறார்கள். 40 வயதை தாண்டிய ஆண்களும், உறவு சிக்கல்களில் இருக்கு ஆண்களும்தான் அவர்களின் இலக்கு. மேலும் அவர் தனியாக இருக்கிறாரரா, விவகாரத்து பெற்றவரா எனவும் நோட்டமிடுகின்றனர். இதன் அடிப்படையில்தான் அவர்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை உள்ளது" என்றார்.

ஹரி என்பவர் நிதி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். அவருக்கு ஃபேஸ்புக் மூலம் ஜூன் மாதம் ஒரு குறுஞ்செய்தி வருகிறது. அவரும் வீடியோ கால் செய்ய ஒப்புக் கொள்கிறார். பின்னர் ராகேஷ்க்கு நடந்ததே இவருக்கும் நடக்கிறது. இந்தச் சம்பவம் நடந்து எழு நாட்கள் கடந்த பிறகு ஹரி புகாரளிக்கிறார்.

ஹரி இதுகுறித்து கூறும்போது, ”நான் பேஸ்புக்கில் தீவிரமாக செயல்படுவேன். எனக்கு குறுஞ்செய்தி அனுப்பிய அந்த அக்கவுன்ட் சந்தேகமடையும் வகையில் இல்லை. அதனால் நான் நம்பினேன்” என்றார்.

பரத்பூர், அல்வார், மேவாட் மற்றும் மதுரா ஆகிய பகுதிகளில் உள்ள வேலையில்லா இளைஞர்கள்தான் இம்மாதிரியான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பலரும் தங்களது படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்கள். இவர்கள் கூகுள் மொழிபெயர்ப்பை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுடன் ஆங்கிலத்தில் கலந்துரையாடி மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x