

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பெண் நீதிபதியை பின்தொடர்வதாக புகார் எழுந்ததையடுத்து, வழக்கறிஞர் ஒருவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஹமிர்பூர் நீதிமன்ற பெண் நீதிபதி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதில், “ஜூலை 25-ம் தேதி காலை 8.45 மணிக்கு நீதிமன்ற அறைக்கு ஒரு வழக்கறிஞர் வந்தார். அவர் பெயர் தெரியாது. மேலும் யமுனா நதிக்கரை நடை பாதையில் வழக்கமான நடை பயிற்சிக்குப் பிறகு அங்கு சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். அப்போது, செல்போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில், நீதிமன்ற அறைக்கு வந்த அதே நபர் எனக்கு அருகே வந்து நின்றார். அவர் ஏதோ சொல்ல முயன்றார்.
இதையடுத்து செல்போனில் பாட்டு கேட்பதை நிறுத்திவிட்டு என்ன சொல்கிறார் என்று கேட்டேன். அப்போது, “இந்த நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்டதற்கு நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். வேறு எங்காவது உங்களை பணியமர்த்தி இருந்தால் நான் அதை விரும்பி இருக்க மாட்டேன்” என்றார்.
இதுபோல பேச வேண்டாம். என்னை பின் தொடர வேண்டாம் என எச்சரித்துவிட்டு வந்துவிட்டேன். அதன் பிறகும் அந்தநபர் என்னை பின் தொடர்கிறார்” என கூறியுள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என ஹமீர்பூர் மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் அனூப் குமார் தெரிவித்துள்ளார்.