திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு - சிறப்பு புலனாய்வு குழுவினர் கோவையில் விசாரணை
கோவை: திருச்சி ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, கோவையில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தினர்.
திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ராமஜெயம். இவர், தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர். 2012 மார்ச் 29-ல் திருச்சி அருகே கல்லணை சாலையில் உள்ள திருவளர்ச்சோலை என்ற இடத்தில் ராமஜெயம் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இச்சம்பவம் தொடர்பாக திருச்சி போலீஸார் விசாரித்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கும் பின்னர் சிபிஐக்கும் மாற்றப்பட்டது. அதன்பிறகும் கொலையாளிகளை கண்டறிய முடியாததால், உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறது.
இந்த வழக்கில் முக்கிய தடயமாக, கொலை சம்பவம் நடந்தநாளில், அப்பகுதியில் சந்தேகத்துக்குரிய கார் ஒன்று வந்து சென்றது அங்குள்ள ஒரு சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. அந்த வாகனத்தில் கொலையாளிகள் தப்பிச் சென்று இருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட மாடல் கார் தமிழகம் முழுவதும் 1,600 பேரிடம் உள்ளது.
கார் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள 3 டிஎஸ்பிக்கள் தலைமையிலான குழுவினர், குறிப்பிட்ட மாடல் காரின் உரிமையாளர்கள் குறித்த பட்டியலை சேகரித்து, ஒவ்வொரு இடமாகச் சென்று காரின் உரிமையாளர்களை சந்தித்து விசாரித்து வருகின்றனர்.
கோவையில் மட்டும் 250-க்கும் மேற்பட்டோரிடம் இந்த கார் உள்ளது தெரியவந்தது. இதயைடுத்து சிறப்பு புலனாய்வுக் குழுவினர், நேற்று கோவைக்கு வந்தனர். கோவையின் பல்வேறு இடங்களில் வசிக்கும் கார் உரிமையாளர்களை சந்தித்து அவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.
கொலை நடந்தபோது அவர்களது கார் எங்கு இருந்தது, யார் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
