Published : 21 Aug 2022 05:44 AM
Last Updated : 21 Aug 2022 05:44 AM

முதலீட்டாளர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி புகார் - சேலத்தில் நிதி நிறுவன அதிபர், மனைவியுடன் கைது

பாலசுப்ரமணியம்

சேலம்: சேலத்தில் நிதி நிறுவனம் நடத்தி, முதலீட்டாளர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த புகாரில் நிதி நிறுவன அதிபர், அவரது மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஜஸ்ட் வின் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் பாலசுப்பிரமணியம். இவர், தனது நிறுவனத்தில் ரூ.1 லட்சம் செலுத்தினால் ஓராண்டில் மொத்தம் ரூ.2.60 லட்சம் வழங்கப்படும் என்று கூறி விளம்பரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதை நம்பி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி உள்பட பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் முதலீடு செய்துள்ளனர். அவர்களில் பலருக்கும் சில மாதங்கள்வரை விளம்பரத்தில் குறிப்பிட்டபடி, முதலீட்டுக்கு ஏற்ப பணம்வழங்கப்பட்ட நிலையில், பின்னர் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், 2 தினங்களுக்கு முன்னர் சேலத்தில் உள்ள ஜஸ்ட் வின் அலுவலகத்துக்கு வந்திருந்த முதலீட்டாளர்கள், அங்கிருந்த பாலசுப்பிரமணியத்திடம், பணம் கேட்டபோது, பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், சேலம் அழகாபுரம் போலீஸில் புகார் செய்தனர்.

குறிப்பாக, நிதி நிறுவனத்தில் முகவராக பணிபுரிந்தவர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். ரூ.37 லட்சம் மோசடி, ரூ.1.57 கோடி மோசடி, ரூ.5 லட்சம் மோசடி என பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதனிடையே, ஜஸ்ட் வின் நிறுவனத்தில் முதலீடு செய்து, பாதிக்கப்பட்டவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து பாலசுப்ரமணியம், அவரது மனைவி தனலட்சுமி ஆகியோரைபோலீஸார் கைது செய்தனர்.

கைதான பாலசுப்ரமணியத்திடம் இருந்து, பாஜக பெயருடன், மோடி விகாஷ் மிஷன் என்ற பெயரில் விசிட்டிங் கார்டுகள் இருந்தன.

அப்படி ஒரு அமைப்பே இல்லை

இதுகுறித்து பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கோபிநாத் கூறும்போது, ‘மோடி விகாஷ் மிஷன்’ என்பதுபோல, பாஜக அல்லது மத்திய அரசு சார்பில் எந்த அமைப்பும் கிடையாது. பாஜகவில் உறுப்பினராக கூட இல்லாத அவர்,தனது காரில் பாஜக கொடியைபயன்படுத்தி வருவதை தடுக்குமாறு ஓராண்டுக்கு முன்பே போலீஸில் புகார் அளித்தேன்’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x