

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட மருத்துவ மாணவியின் சடலம், உடற்கூறாய்வுக்குப் பிறகு பெற்றோரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகள் காயத்ரி(23). திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படித்து வந்த இவர், ஆக.18-ம் தேதி விடுதியில் உள்ள தனது அறையில் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீஸார் விசாரித்து வந்தனர்.
இதனிடையே, பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் உயிரிழப்பது தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, சிபிசிஐடி போலீஸார் நேற்று விடுதியில் உள்ள அந்த மாணவியின் தோழிகளிடம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, சிபிசிஐடி டிஎஸ்பி அன்பரசன், ஆய்வாளர் நிஷா ஆகியோர் முன்னிலையில், நேற்று உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டு, மாணவியின் சடலம் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக, காயத்ரியின் சடலத்துக்கு சக மருத்துவ மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், காயத்ரியின் சடலம் திருவாரூர் நெய்விளக்கு தோப்பில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மருத்துவ மாணவி உயிரிழந்த விவகாரத்தில், விடுதிக் காப்பாளர் உரிய முறையில் தங்கள் மகளைக் கவனிக்கவில்லை என்று காயத்ரியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.