பெண் எஸ்.பி. பாலியல் வழக்கு: விழுப்புரம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மாயம்

பெண் எஸ்.பி. பாலியல் வழக்கு: விழுப்புரம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மாயம்
Updated on
1 min read

விழுப்புரம்: சிறப்பு டிஜிபி மீது பெண் எஸ்பிஒருவர் பாலியல் புகார் அளித்தவழக்கில், விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மாயமாகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

2021-ல், அப்போதைய முதல்வரின் பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்தபோது தமிழக காவல்துறை சிறப்பு டிஜிபி, தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்.பி. ஒருவர் புகார் அளித்தார். பெண் எஸ்பியின் புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபி அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் செங்கல்பட்டு எஸ்.பி ஆகியோர்பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க உத்தரவிட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முன்னாள்சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி ஆகியோர் மீது சிபிசிஐடி போலீஸார், 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, அவர்கள் இருவர் மீதும் கடந்தாண்டு ஜூலை மாதம் 29-ம் தேதி விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த குற்றவியல் நடுவர் மன்றத்தில் கடந்த ஓராண்டாக இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இவ்வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு சாட்சிகளான உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி, பரனூர்ஆகிய சுங்கச்சாவடிகளில் பணியாற்றி வரும் 8 ஊழியர்களில் 5 பேர் அளித்த சாட்சியங்களை நடுவர் புஷ்பராணி பதிவு செய்து கொண்டார்.

இந்நிலையில் சிறப்பு டிஜிபி, பெண் எஸ்.பி.யிடம் செல்போனில் பேசிய உரையாடல் பதிவுகள், வாட்ஸ்அப் மெசேஜ் பதிவுகள், செல்போன் அழைப்பு பதிவுகள் உட்பட, வழக்கில் சிபிசிஐடி போலீஸாரால் சேர்க்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருப்பதை அறிந்த நடுவர் புஷ்பராணி, உடனே அந்த ஆவணங்களை கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டார்.

நீதிமன்ற ஊழியர்கள் பல மணிநேரம் தேடி பார்த்தும் ஆவணங்கள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. காணாமல்போன ஆவணங்களின் மற்றொரு நகல்களை அடுத்த வழக்கு விசாரணையின்போது சிபிசிஐடி போலீஸார் சமர்ப்பிக்க வேண்டும் என நடுவர் புஷ்பராணி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

ஆவணங்கள் மாயமானது தொடர்பாக நீதிமன்ற ஊழியர்களிடம் குற்றவியல் நடுவர் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி வருவதாகவும், இதில் நீதிமன்ற ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in