

திருப்பூர்: தாராபுரத்தில் 5 வயது குழந்தையிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தொழிலாளிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.
கடந்த மார்ச் 19-ம் தேதி வீட்டில் குழந்தை தனியாக இருந்தது. அப்போது கூலித் தொழிலாளி தினேஷ்பாபு (28), குழந்தையிடம்பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். பெற்றோர் அளித்த புகாரில், தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸார், போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிந்து, தினேஷ்பாபுவை கைது செய்தனர்.
வழக்கை விசாரித்த திருப்பூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி நாகராஜன், தினேஷ்பாபுவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜமீலாபானு ஆஜரானார். இதையடுத்து தினேஷ்பாபு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.