திருப்பூர் | மயக்க மருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து வடமாநில தொழிலாளியிடம் பணம் திருட்டு
திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையப் பகுதியில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளிக்கு மயக்க மருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து ரூ.23 ஆயிரத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியிலுள்ள நூற்பாலையில் பணிபுரிந்து வருபவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சகாதேவ் சவுத்ரி (34).
இந்நிலையில், ஒரு மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்வதற்காக, பல்லடத்தில் இருந்து திருப்பூர் ரயில் நிலை யத்துக்கு கடந்த 15-ம் தேதி சகாதேவ் சவுத்ரி வந்தார். அவரது அருகில் 3 பேர் நின்றுள்ளனர். எந்த ஊருக்கு செல்கிறீர்கள் என சகாதேவ் சவுத்ரியிடம் கேட்டுள்ளனர். மேற்குவங்க மாநிலம் என்று கூறியதற்கு, தாங்களும் அதே பகுதிக்கு செல்வதாகக் கூறி பேச்சு கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, ரயில் நிலையம் அருகில் உள்ள தேநீர் கடைக்கு தேநீர் அருந்த சென்றுள்ளனர். அப்போது, சகாதேவ் சவுத்ரிக்கு சாப்பிடுவதற்கு ஒரு பிஸ்கட் கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்டதும் மயக்கம் வருவதாக சகாதேவ் சவுத்ரி கூறியுள்ளார். உடனடியாக அந்த 3 பேரும் ரயிலுக்கு செல்வோம் என கூறியுள்ளனர்.
சிறிது நேரத்தில் சகாதேவ் சவுத்ரி மயக்கமடைந்தார். அப்போது, அவர் வைத்திருந்த ரூ.23 ஆயிரம், அலைபேசி, துணிகள் வைத்திருந்த பை உள்ளிட்டவற்றை திருடிவிட்டு 3 பேரும் தப்பினர்.
இதுதொடர்பாக, மயக்கம் தெளிந்ததும் அருகில் இருந்தவர்களிடம் சகாதேவ் சவுத்ரி கூறியுள்ளார். மேலும், நூற்பாலைக்கு சென்று, சம்பவம் குறித்து உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, தற்போது சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக மாநகர போலீஸார் விசாரிக்கின்றனர்.
