

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி, மாட்டாங்குப்பம், கற்பக கன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ராஜா (45). இவரை கடந்த 16-ம் தேதி இருசக்கர வாகனங்களில் வந்த 11 பேர் கும்பல் கொலை செய்துவிட்டு தப்பியது.
இந்த கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா (25), இவரது சகோதரர்தேவா (23) உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இரு தரப்புக்கும் முன் விரோதம் இருப்பதும், ராஜாவை கொலை செய்ய சூர்யா தரப்பு திட்டமிட்டு தயாராகிவருவது தொடர்பாகவும் அண்ணா சதுக்கம் போலீஸாருக்கு முன் கூட்டியே தகவல் கிடைத்துள்ளது.
ஆனால், அந்த காவல்நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஸ்டாலின், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால் கொலை நடந்திருப்பது காவல் உயர் அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஆய்வாளர் ஸ்டாலினை பணியிடை நீக்கம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
விரைந்து செயல்படாமல், பணியில் சுணக்கம் காட்டும் போலீஸார் மீதான நடவடிக்கை தொடரும் என போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.