

திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி விடுதி அறையில் பெண்பயிற்சி மருத்துவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்தவர் வேலுசாமி மகள் காயத்ரி(23). இவர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் முடித்துவிட்டு, அக்கல்லூரி மருத்துவமனையின் விடுதியில் தங்கி, பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 6 மாதங்களாக மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக பணிக்குச் செல்லாத காயத்ரி, பிறரின் செல்போன் அழைப்பையும் ஏற்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக பயிற்சி மருத்துவர்கள் நேற்று காயத்ரியின் அறைக் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, அங்கு மின்விசிறியில் தூக்கிட்டுதொங்கிய நிலையில் காயத்ரி சடலமாகக் கிடந்தார்.
தகவலறிந்து வந்த திருவாரூர் தாலுகா போலீஸார், காயத்ரியின் அறையில் சோதனையிட்டபோது, அவர் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. இதுதொடர்பாக, போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு உத்தரவின்படி சிபிசிஐடி போலீஸாரும் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.