Published : 20 Aug 2022 04:57 AM
Last Updated : 20 Aug 2022 04:57 AM

அரும்பாக்கம் வங்கி கொள்ளை | அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் கைது - அனைத்து நகைகளும் மீட்கப்பட்டன

சென்னை: அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் மேலும் திருப்பமாக அச்சிறுப்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளைபோன 481 வாடிக்கையாளர்களின் நகைகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவல் கூடுதல் ஆணையர் (வடசென்னை) அன்பு, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

வங்கி கொள்ளை வழக்கில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் பாலாஜி, சந்தோஷ் ஆகிய 2 பேரை முதலில் கைது செய்தோம். அவர்களிடம் இருந்து 18 கிலோ தங்க நகைகளை மீட்டோம். இந்த வங்கியில் வேலை பார்த்த முக்கிய குற்றவாளியான முருகன், அவரது நண்பர்கள் செந்தில், சூர்யா ஆகிய 3 பேரை கைது செய்தோம். இதில் முருகனும், சூர்யாவும் கொள்ளையில் நேரடியாக ஈடுபட்டவர்கள்.

கொள்ளைபோன நகைகளின் மொத்த எடை 31.7 கிலோ. இந்த நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளன. இதில் கோவையைச் சேர்ந்த ஸ்ரீ வத்சா என்பவரையும் கைது செய்திருக்கிறோம். அவர் சென்னை அழைத்து வரப்படுகிறார். இதில் சந்தோஷிடம் அதிகபட்சமாக 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் எவ்வளவு நகைகள் கொள்ளை போனது என்பதில் குழப்பம் இருப்பதாக தகவல் வெளியானது.

வாடிக்கையாளர் அடகு வைத்த நகைகளை கவருடன் எடை போட்டிருந்தோம். பின்னர் கவர் எடையை கழித்த போது 15 கிலோ 900 கிராம் தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. 2 கிலோ 100 கிராம் கவர் எடை இருந்ததால்தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கொள்ளை நடந்த மறுநாள் சந்தோஷ், அவருடைய, உறவினரான ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ஒரு பகுதியை பையில் வைத்துவிட்டு வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அமல்ராஜிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தோம். கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அவருடைய வீட்டில் 3 நாட்கள் இருந்திருக்கிறது. அந்தத் தகவல் அவருக்குத் தெரியும். ஆய்வாளர் அமல்ராஜை கைது செய்துள்ளோம். கொள்ளை போன 31.7 கிலோ நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

இந்த கொள்ளை வழக்கில் வேறு போலீஸாருக்குத் தொடர்பு இல்லை. அமல்ராஜூக்கு மட்டும் இந்த கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தெரியும். ஆய்வாளர் அமல்ராஜ், இதற்கு முன்பு இதுபோன்ற கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது போன்று தெரியவில்லை.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை அப்படியே விற்க முடியாது என்பதால் மொத்தமாக உருக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர். இதற்காக இயந்திரம் ஒன்றையும் வாங்கியுள்ளனர். அந்த இயந்திரத்தை வாங்குவதற்கு ஸ்ரீவத்சா உறுதுணையாக இருந்துள்ளார். குரோம்பேட்டையில் உள்ள லாட்ஜில் தங்கி இந்த நகைகளை உருக்க முயற்சி செய்துள்ளார்கள். இயந்திரத்தில் இருந்து புகை வந்ததும் லாட்ஜில் இருப்பவர்கள் சந்தேகம் அடைவார்கள் என்று எண்ணி அறையை காலி செய்துவிட்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் சென்றுள்ளனர்.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் சிக்கி இருப்பது, காவல்துறைக்கு கரும்புள்ளியா என்று கேட்கிறீர்கள். சமூகம் என்பது எல்லோரும் சேர்ந்தது தான். இதில் காவல்துறையை மட்டும் தனியாக பார்க்க முடியாது. தற்போது அவரை நாங்கள் விட்டிருந்தால்தான் கரும்புள்ளி என்று எடுத்துக் கொள்ள முடியும். இவ்வளவு பெரிய வழக்கை சீக்கிரம் முடித்திருக்கிறோம் என்பதை சாதனையாகத் தான் பார்க்க முடியும்.

கொள்ளை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் முகக்கவசம் அணிந்திருந்தாலும், அடையாளம் கண்டு கைது செய்துள்ளோம். கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான முருகன், இந்த வங்கியில் வேலைபார்த்ததால் அலாரத்தை அணைத்து வைத்துள்ளார். கொள்ளை சம்பவம் நடந்து 20 நிமிடங்கள் கழித்து வாடிக்கையாளர் ஒருவர் உள்ளே சென்ற பிறகுதான் எங்களுக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது. எனவே வங்கி, நிதி நிறுவனங்கள் அலாரம் சிஸ்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்த இருக்கிறோம் என்றார்.

கைது செய்யப்பட்ட அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் அமல்ராஜ், திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளம் பகுதியைச் சேர்ந்தவர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த இவர், கடந்த 2020 டிசம்பரில் மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பொறுப்பேற்றார். பின்னர், 2022-ம் ஆண்டு மே மாதம் அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேல்மருவத்தூர் பகுதியில் மருவூர் அவென்யூவில் மனைவி இந்திரா மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்தார்.

மீட்கப்பட்ட நகைகள் விவரம்

வங்கி நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மீட்கப்பட்ட நகைகள் பட்டியலை அரும்பாக்கம் போலீஸார் நேற்று வெளியிட்டனர். அதன் விவரம்:

கடந்த 15-ம் தேதி சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் சந்தோஷிடம் இருந்து 15 கிலோ 951 கிராம் தங்க நகைகளும், பாலாஜியிடம் இருந்து 63 கிராம் கைச்செயினும், 17-ம் தேதி சந்தோஷின் உறவினரான அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் இருந்து 3 கிலோ 590 கிராம் தங்க நகைகளும் மீட்கப்பட்டன.

18-ம் தேதி சூர்யாவிடம், ஜெய் நகர் பார்க்கில் இருந்து 8 கிலோ 827 கிராம் நகைகள் மீட்கப்பட்டன. அதே தினத்தில் சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் செந்திலிடம் 80 கிராம் நகைகள் மீட்கப்பட்டன. அன்றைய தினம் குரோம்பேட்டையில் உள்ள சந்தோஷின் பாட்டி வீட்டில் இருந்து 2 கிலோ 656 கிராம் நகைகள் மீட்கப்பட்டன.

19-ம் தேதி பாலாஜியின் வில்லிவாக்கம் வீட்டில் இருந்து 100 கிராம் நகைகளும், சேர்ந்த வத்சாவிடம் இருந்து 63 கிராம் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x