

ராஞ்சி: ஜார்க்கண்டில் சக கைதியை கொலை செய்த வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் மத்திய சிறை உள்ளது. அங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் இரு குழுக்களிடையே கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் படுகாயமடைந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் கிழக்கு சிங்பும் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், இருதரப்பு வாதங்களும் முடிந்ததால், நீதிபதி ராஜேந்திர குமார் சின்ஹா நேற்று தீர்ப்பு வழங்கினார்.
இதில் குற்றம் சாட்டப் பட்டோரில் 15 பேருக்கு இந்திய தண்டனை சட்டத்தின் 302 (கொலை) மற்றும் 12பி (குற்றச்சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு கூடுதல் வழக்கறிஞர் ராஜீவ் குமார் தெரிவித்தார். மேலும் 307-வது (கொலை முயற்சி) பிரிவின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனைவழங்கப்பட்டுள்ளது.