

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் இரு கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதைக்கண்ட பயணிகள் அலறி அடித்து ஓடினர். இந்த மோதலில், படுகாயமடைந்த ஒரு மாணவன், திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவள்ளூர் மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் சென்னையில் உள்ள பச்சையப்பன் மற்றும் மாநிலக் கல்லூரிகளில் படிக்கின்றனர்.
ரூட் தல பிரச்சினை
இவர்கள் சென்னை- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் செல்லும் மின்சார ரயில்களில் பயணிக்கின்றனர். அவ்வாறு பயணிக்கும் இரு கல்லூரி மாணவர்களிடையே, ‘ரூட் தல’ பிரச்சினையில் அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இதுதொடர்பாக ஏற்கெனவே ரயில்வே போலீஸார், சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி இருந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை அரக்கோணத்திலிருந்து, சென்னை வந்த மின்சார ரயில் திருவள்ளூர் அருகே ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் நின்றபோது, ரயில் நிலையத்தில் இரு கல்லூரி மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அரிவாள், கத்தியால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இச்சம்பவத்தில், பச்சையப்பன் கல்லூரியில் படித்து வரும் அரக்கோணம் அடுத்த தக்கோலம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தப்பியோடினர். இச்சம்பவத்தால், ரயில் நிலையத்தில் இருந்த பொதுமக்கள், மாணவர்கள் அலறி ஓடினர்.
தகவலறிந்து வந்த திருவள்ளூர் ரயில்வே போலீஸார், படுகாயமடைந்த தினேஷை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் மாணவன் தினேஷிடம் திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் விசாரணை மேற்கொண்டார்.
இச்சம்பவத்தையடுத்து,நேற்று திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் திருவள்ளூர், ஏகாட்டூர் ரயில் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இரு கல்லூரி மாணவர்கள் மோதல் சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மோதலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.