அரும்பாக்கம் தனியார் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து நகைகளும் மீட்பு: சென்னை போலீஸ்

அரும்பாக்கம் தனியார் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து நகைகளும் மீட்பு: சென்னை போலீஸ்
Updated on
1 min read

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் தனியார் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 18 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 13 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

சென்னை அரும்பாக்கம், ரசாக் கார்டன் சாலையில், பெடரல் வங்கியின் நகைக்கடன் பிரிவான பெட் வங்கி நிதிச் சேவைகள் மையம் இயங்கி வருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 31.7 கிலோ தங்க நகைகள் கடந்த 13-ம் தேதி கொள்ளை போனது. பட்டப்பகலில் நடந்த இந்தக் கொள்ளை சம்பவம் சென்னையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

வங்கியின் கிளை மேலாளர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில், அரும்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்ட னர். இதில், கொள்ளையில் ஈடுபட்டது அதே வங்கியில் மண்டல மேலாளராகப் பணிபுரிந்த முருகன் என்பவர் மூளையாகச் செயல்பட்டதும், 10 நாட்களாக திட்டமிட்டு, கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதும் தெரிய வந்தது.

கொள்ளை நடந்த 24 மணி நேரத்துக்குள், சென்னை வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்த சந்தோஷ் (30), அதே பகுதி மண்ணடி தெருவைச் சேர்ந்த பாலாஜி (28) ஆகியோர் முதலில் சிக்கினர். அவர்களிடம் இருந்து 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.8.5 கோடி ஆகும்.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், "கொள்ளையர்களை பிடிப்பதற்காக 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு படையினரும் ஒவ்வொரு பணியை செய்தனர். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. கொள்ளை நடந்த 24 மணி நேரத்தில்,சந்தோஷ், பாலாஜி, செந்தில்குமரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 18 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 10 நாட்களாகவே இந்தகொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற இவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட முருகன், சந்தோஷ், பாலாஜி, சூரியா ஆகியோர் ஒரே பள்ளியில் படித்தவர்கள். முக்கிய குற்றவாளியான முருகனைத் தவிர மேலும் 4 பேருக்குஇந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருக்கிறது. அவர்களையும் தேடி வருகிறோம்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை சூர்யா என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், விழுப்புரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 13 கிலோ தங்கம், மற்றும் உருக்கப்பட்ட நிலையில் 700 கிராம் தங்கத்தையும் போலீஸார் மீட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த சென்னை அரும்பாக்கம் வங்கியில் கொள்ளைபோன அனைத்து நகைகளும் மீட்கப்பட்டுவிட்டதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in