திருவாரூர் | பாஜக மாவட்ட தலைவருக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்த நபர் கைது

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட பாஜக தலைவருக்காக ஆள்மாறாட்டம் செய்து செமஸ்டர் தேர்வு எழுத வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் திருவிக அரசினர் கலைக் கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர படிப்புகளுக்கான பருவத்தேர்வுகள் கடந்த 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்வுகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே நடைபெறும்.

இந்த நிலையில் பி.ஏ., பொலிட்டிக்கல் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு தேர்வு இன்று (ஆக.13) மதியம் நடைபெற்றது. இந்தத் தேர்வில் பாஸ்கர் என்ற நபர் தேர்வு எழுத வந்திருந்தார். தேர்வு எழுதுபவர்களின் அடையாள அட்டை மற்றும் நுழைவு சீட்டு ஆகியவற்றை தேர்வு அறையில் இருந்த கண்காணிப்பாளர் பரிசோதனை செய்த போது, பாஸ்கர் என்று சொன்ன நபருக்கும் அடையாள அட்டை மற்றும் தேர்வு அறை நுழைவுச்சீட்டில் ஒட்டப்பட்டு இருந்த புகைப்படத்துக்கும் வித்தியாசம் இருப்பதை கண்டுபிடித்து தேர்வு நடத்தும் அலுவலருக்கு கண்காணிப்பாளர் தகவல் கொடுத்தார்

அதன் அடிப்படையில் நடந்த விசாரணையில், தேர்வு எழுத வந்த நபர் திருவாரூர் சபாபதி முதலியார் தெருவை சேர்ந்த திவாகரன் (29) என்பதும், திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் என்பவருக்காக திவாகரன் தேர்வு எழுத வந்ததும் தெரிய வந்தது.

மேலும் திவாகரன்12-ம் வகுப்பு முடித்து விட்டு, பீப் கடை நடத்தி வருவதாகவும், பாஜக பிரமுகர் ஒருவர் தன்னை பாஸ்கர் என்ற நபருக்காக தேர்வு எழுத சொன்னதாகவும் தேர்வு நடத்தும் அலுவலர்களிடம் திவாகரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த ஆள்மாறாட்ட சம்பவம் குறித்து திருவாரூர் தாலுக்கா போலீசாருக்கு தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக தேர்வு நடத்தும் அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் திருவாரூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in