Published : 13 Aug 2022 07:19 AM
Last Updated : 13 Aug 2022 07:19 AM
கோவை: ஈமு கோழி வளர்ப்புத் திட்டத்தில் ரூ.5.56 கோடி மோசடி செய்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) நேற்று தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை, காட்டூர் சாலை, ரோஜா நகரில் சி.என்.செல்வகுமார் ஈமு பார்மஸ் நிறுவனமும், திருப்பூர் மரவபாளையத்தில் சிஎன்எஸ் ஈமு பார்ம்ஸ் என்ற நிறுவனமும் இயங்கி வந்தன. இந்த நிறுவத்தை சி.என்.செல்வகுமார், எஸ்.லோகநாதன், எஸ்.புவனேஸ்வரி, கே.எஸ்.செல்வம், எஸ்.சாந்தி ஆகியோர் நடத்தி வந்தனர்.
இந்த நிறுவனத்தில் ரூ.1.70 லட்சம் முதலீடு செய்தால், அதற்கு 6 ஈமு கோழிக் குஞ்சுகள் அளித்து, மாதம் ரூ.6 ஆயிரம் வட்டியாக அளிப்பதாக இரு வேறு திட்டங்களை விளம்பரப்படுத்தினர். இதனை நம்பி, மொத்தம் 140 பேர் ரூ.5.56 கோடி முதலீடு செய்தனர். ஆனால், வாக்குறுதி அளித்தபடி பணத்தை திருப்பி அளிக்கவில்லை.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களில் ஒருவரான சென்னிமலையைச் சேர்ந்த விஜயகுமார், ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் 2013 செப்டம்பர் 21-ம் தேதி புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கோவை ஒருங் கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலை யில், குற்றம்சாட்டப்பட்ட சி.என்.செல்வகுமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5.60 கோடி அபராதம் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ரவி நேற்று தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட மற்ற அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT