

சென்னை: கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்களை குறிவைத்து போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்ததாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை அண்ணா சாலை பார்டர் தோட்டம் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக திருவல்லிக்கேணி தனிப்படை போலீஸுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பார்டர் தோட்டம் மோகன்தாஸ் தெருவில் தனிப்படையினர் நேற்று தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த இருவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதையடுத்து போலீஸார் இருவரையும் சோதனையிட்டனர். அப்போது அவர்கள் 10 கிராம் மெத்தம்மெட்டமைன், ரூ.4 லட்சம் மதிப்புள்ள போதை ஸ்டாம்ப்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக நடத்திய விசாரணையில் அவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த ரியாஸ் அகமது கான் (30), திருவொற்றியூர் தாங்கல் பகுதியைச் சேர்ந்த முகம்மது ஈஸா (26) என்பது தெரியவந்தது. போலீஸார், இருவரையும் கைது செய்தனர்.
இருவரும் கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்களை குறிவைத்து இவற்றை விற்பனை செய்துள்ளனர். ஒரு போதை ஸ்டாம்புக்கு ரூ.2,500 வரை விலை வைத்து விற்பனைசெய்ததாக போலீஸார் தெரிவித்தனர். இருவரின் பின்னணி குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.