

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் சோனா சுருளியை போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்ட அதிமுக ஜெ. பேரவை மாவட்ட இணைச் செயலாளர் சோனாசுருளி. இவர், கூட்டுறவு சங்க ஒன்றியக் குழு துணைத் தலைவர், திண்டுக்கல் மாநகராட்சி 4- வது வார்டு கவுன்சிலராகவும் இருந்துள்ளார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில், கூட்டுறவு வங்கி, மீன்வளம், மின் வாரியம், ஆவின், மாநகராட்சி மற்றும் அரசு பணிகளில் அலுவலக உதவியாளர்கள், ஓட்டுநர் பணி வாங்கித் தருவதாக கூறி திண்டுக்கல்லைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட நபர்களிடம் ஒரு கோடி ரூபாய் வரை வாங்கியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், யாருக்கும் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் திண்டுக்கல் எஸ்.பி. பாஸ்கரனிடம் புகார் அளித்தனர்.
இதுகுறித்து குற்றப் பிரிவு போலீஸார் விசாரணைக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். இந்தப் புகாரில் உண்மை இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முன்னாள் கவுன்சிலர் சோனாசுருளியை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் மேலும் பலர் இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தது தெரிய வந்துள்ளது.