

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் தக் ஷின கன்னடா மாவட்டம் மங்களூருவை சேர்ந்த பாஜக நிர்வாகி பிரவீன் நெட்டூரு (28) கடந்த 26-ம் தேதி மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.
இவ்வழக்கில் ஹாவேரியை சேர்ந்த ஜாகீர் (29), பெல்லா ரேவை சேர்ந்த முகமது ஷபீக் (28) ஆகியோர் உட்பட 7 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை 15 நாட்கள் காவலில் எடுத்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து கர்நாடக போலீஸ் ஏடிஜிபி அலோக் குமார் கூறுகையில், ”பிரவீன் நெட்டூரு கொலை வழக்கில் மங்களூருவைச் சேர்ந்த ஷியாபுதீன் அலி (30), ரியாஸ் ஆனந்தட்கா (27), பஷீர் (29) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கொலையில் நேரடி தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கி இருக்கின்றன. மங்களூருவில் இருந்து கடந்த ஜூலை 26-ம் தேதி வெளியேறிய இவர்கள், கேரள மாநிலம் காசர் கோட்டில் தங்கியிருந்தனர்.
கைதானவர்களிடம் இருந்து கொலைக்காக பயன்படுத்தப்பட்ட 7 கார்கள், 5 இரு சக்கர வாகனங்கள், 1 ஆட்டோ, 12 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த 3 பேருக்கும் எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ ஆகிய கட்சிகளோடு தொடர்பு இருக்கிறது. அரசியல் பகை காரணமாக கொலை செய்யப்பட்டதா என விசாரித்து வருகிறோம்” என்றார்.