

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தனியார் பள்ளி கலவரத்தில் மாணவர்களின் சான்றுகளை எரித்ததாக லட்சாதிபதிஎன்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் கடந்த ஜூலை 13-ம் தேதி பிளஸ்-2 மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதையடுத்து இப்பள்ளியில் கடந்த17-ம் தேதி வன்முறைக் கும்பல் புகுந்து தீ வைத்தது. போலீஸார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. தீ வைப்பு சம்பவத்தில் மாணவர்களின் சான்றிதழ்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
இந்தக் கலவரம் தொடர்பாக 10 பிரிவுகளின் கீழ் சின்னசேலம் போலீஸாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இக்கலவரத்தில் 322 பேர் கைது செய்யப்பட்டு விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தேடப்பட்டு வந்தவர்
இதற்கிடையே, இப்பள்ளி கலவரத்தின்போது சின்னசேலம் வட்டம் வி.மாந்தூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சாதிபதி (34) என்பவர் மாணவர்களின் சான்று, ஆவணங்களை தீ வைத்து கொளுத்தியதாக திருப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி கலவரத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளைக் கொண்டு இவர் தேடப்பட்டு வந்த நிலையில் சிறப்பு புலனாய்வு போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
69 பேருக்கு ஜாமீன்
இந்நிலையில் பல்வேறுசிறைகளில் அடைக்கப்பட்டுஉள்ளவர்களில் 296 பேருக்கான ஜாமீன் மனு மீதான விசாரணை விழுப்புரத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
64 பேருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது மற்றவர்களின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நடத்தப்பட்டது. இதில் 69 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.