

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தனியார் பள்ளி விவகாரத்தில் சிறையிலுள்ள ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் விடுதி மாணவி மர்மமான முறையில் இறந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்துவருகிறது.
இந்தவழக்குத் தொடர்பாக அந்த தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்ரியா ஆகிய 5 பேரையும் போலீஸார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த 5 பேரும், தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி தாக்கல் செய்த மனு நேற்று 3-வது முறையாக விசாரணைக்கு வந்தது.
அப்போது கணித ஆசிரியை கிருத்திகாவின் சார்பில், அவரது தந்தை ஜெயராஜ் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்தமனுவில் பள்ளி தாளாளர், செயலாளர் ஆகியோருடன் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகளான, கிருத்திகாவுக்கு சிறையிலேயே பள்ளி நிர்வாகிகளால் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவரை சேலம் சிறையில் இருந்து திருச்சி சிறைக்கு மாற்றவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இம்மனுவை ஏற்றுக்கொண்ட விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதிசாந்தி, மனு மீதான விசாரணையை பிறகு மேற்கொள்வதாக தெரிவித்தார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியையின் உயிருக்கு, பள்ளி நிர்வாகிகளால் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அவரது தந்தை மனுத்தாக்கல் செய்துள்ளது இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.