கும்பகோணம் அருகே சுவாமிமலை சிற்பக் கூடத்தில் 1,000 ஆண்டுகள் பழமையான 8 சிலைகள் பறிமுதல்

கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை, சர்வமான்ய தெருவில் உள்ள ஸ்தபதி மாசிலாமணியின் சிற்பக் கூடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான விஷ்ணு, புத்தர் உட்பட 8 சிலை களை பார்வையிடும் தமிழக காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி கே.ஜெயந்த் முரளி, ஐ.ஜி ஆர்.தினகரன். படம்: பு.க.பிரவீன்
கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை, சர்வமான்ய தெருவில் உள்ள ஸ்தபதி மாசிலாமணியின் சிற்பக் கூடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான விஷ்ணு, புத்தர் உட்பட 8 சிலை களை பார்வையிடும் தமிழக காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி கே.ஜெயந்த் முரளி, ஐ.ஜி ஆர்.தினகரன். படம்: பு.க.பிரவீன்
Updated on
2 min read

கும்பகோணம்: கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சிற்பக் கூடத்தில் 1,000ஆண்டுகள் பழமையான 8 உலோகசிலைகளை சிலைக் கடத்தல் தடுப்புபிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கும்பகோணம் அருகே சுவாமிமலையில் உள்ள ஒரு சிற்பக் கூடத்தில் பழமையான உலோக சிலைகள் இருப்பதாகச் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், சுவாமிமலை சர்வமான்ய தெருவைச் சேர்ந்த மாசிலாமணி ஸ்தபதி(65) என்பவரது சிற்பக் கூடத்தில், சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினர்.

இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த ஸ்தபதிகள் 100-க்கும் மேற்பட்டோர், போலீஸாரை கண்டித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. அதன்பிறகு, சிற்பக் கூடத்தில் இருந்த 8 சிலைகள் மற்றும் சான்றிதழ்களை பறிமுதல் செய்து சென்னைக்கு எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கூறியது: சுவாமிமலையைச் சேர்ந்த ஸ்தபதிமாசிலாமணி என்பவர் பழமைவாய்ந்த சிலைகளை, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரதுவீட்டில் மறைத்து வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் பி.ரவி, காவல் துணை கண்காணிப்பாளர் மோகன் மற்றும் போலீஸார், அங்குசென்று ஆய்வு மேற்கொண்டபோது அங்கு சிலைகள் கிடைக்கவில்லை.

வெளிநாடுக்கு கடத்த திட்டம்

அப்போது, அவர் சிலைகளைசுவாமிமலையில் உள்ள தனதுசிற்பக் கூடத்தில் வைத்திருப்பதாகவும், அதை வெளிநாடுகளுக்குக் கடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுவாமிமலையில் உள்ள மாசிலாமணியின் வீடு, அதன் அருகில் உள்ள சிற்பக் கூடத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜி.பாலமுருகன் மற்றும் போலீஸார் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.13 மீட்டர் அடி உயரம் உள்ள போகசக்தி அம்மன் சிலை, 79 செ.மீ உயரம் உள்ள நின்ற நிலையில் புத்தர் சிலை, 27 செ.மீ உயரம் உள்ள அமர்ந்த நிலையில் புத்தர் சிலை, 68 செ.மீ ஆண்டாள் சிலை, 2.70 மீட்டர் சிவகாமி அம்மன் சிலை, 61 செ.மீ விஷ்ணு சிலை, 1.03 மீட்டர் நடராஜர் சிலை, 35 செ.மீ ரமண மஹரிஷி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

2 பிரிவுகளின் கீழ் வழக்கு

சிலைகளுக்கு உரிய ஆவணங்களோ, உரிமம், தோற்றம் குறித்து விவரங்களோ மாசிலாமணியிடம் இல்லை. இச்சிலைகள் எந்த கோயிலிலிருந்து திருடப்பட்டது எனவிசாரணைக்குப் பிறகு தெரியவரும் என்பதால், காவல் ஆய்வாளர்ஆர்.இந்திரா அளித்த புகாரின் பேரில், மாசிலாமணி மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிலைகளை ஓய்வுபெற்றதொல்லியல் துறை ஆய்வாளர் மீ.தரன் ஆய்வு செய்து, அவைஅனைத்தும் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை எனத் தெரிவித்துள்ளார்.

தொல்லியல் துறை சான்றிதழ்

மேலும், கடந்த 2017-ம் ஆண்டு ஜன. 12-ம் தேதி போகசக்தி தேவியின் உலோகச்சிலைக்கும், 2011-ம்ஆண்டு அக்.3-ம் தேதி விஷ்ணு,புத்தர் சிலைகளுக்கும் தொன்மையானவை என இந்தியத் தொல்லியல்துறையிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ்களும் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டன. இதனால், இந்த தொன்மையான சிலைகளை அவர் எங்கிருந்து வாங்கினார் என விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.

சிலைகளை பறிமுதல் செய்த சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்புக் குழுவுக்கு டிஜிபி சைலேந்திர பாபு வெகுமதி வழங்கி பாராட்டினார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் மோசடி நடைபெற்றதாக எழுந்த புகாரின்பேரில் மாசிலாமணி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in