

திருத்தணி: திருத்தணியில் திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருத்தணி, ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் மோகன் (38). திமுகவைச் சேர்ந்த இவர் மீது திருத்தணி காவல் நிலையத்தில் இரு கொலை முயற்சி வழக்கு, மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், மோகன் நேற்று முன் தினம் இரவு 10 மணியளவில், திருத்தணி பஜார் பகுதிக்கு சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, வீட்டுக்கு அருகே சாலையில் நின்றபடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 இளைஞர்கள், மோகனை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில் மோகன் அதே இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து, தகவலறிந்த திருத்தணி போலீஸார், வழக்குப் பதிவு செய்து, திருத்தணி ஜோதி நகரைச் சேர்ந்த சஞ்சய், பெரியார் நகர் நகரைச் சேர்ந்த விக்னேஷ், வியாசர்பாடியைச் சேர்ந்த ரித்தீஷ்குமார் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.
முதல்கட்ட விசாரணையில், “கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, சஞ்சய்யின் சித்தப்பா சிவாவை மோகன் வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளார். அதற்கு பழி தீர்க்கும் வகையில், தன் நண்பர்களுடன் சேர்ந்து, கொலை செய்தது தெரிய வந்துள்ளதாக” போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.