

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே தேர்தல் முன்விரோதம் காரணாக திமுக கவுன்சிலர் உட்பட 4 பேரை வெட்டி
விட்டு தப்பியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு மலைநகர் கவுன்சிலர் பதவிக்கு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக கூட்டணி சார்பில் சுரேஷ் என்பவரும் மற்றும் திமுக கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தை கட்சியைச் சேர்ந்த காசி என்பவரும் போட்டியிட்டனர்.
இதில், அதிமுக சார்பில் போட்டியிட்ட சுரேஷ் வெற்றி பெற்றார். இதையடுத்து, சில நாட்களில் சுரேஷ் திமுகவில் இணைந்ததாகத் தெரிகிறது. இருப்பினும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட இருவருக்கும் தேர்தல் முன்விரோதம் இருந்து வந்ததாகத் கூறப்படுகிறது.
இந்நிலையில், மலைநகர் பகுதியில் உள்ள அம்மன் கோயிலுக்கு வந்த காசி மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்த சுரேஷை வம்புக்கு இழுத்ததாகவும் இதனால், இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அப்போது, காசியின் நண்பர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் சுரேஷுக்கும் தடுக்கவந்த அவரது உறவினர்கள் முருகன், தவசி, பிரசாத் ஆகியோருக்கும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களை கிராம மக்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின்பேரில், அச்சிறுபாக்கம் போலீஸார் வழக்கு பதிந்து மலைநகர் பகுதியைச் சேர்ந்த சிவச்சந்திரன், கோவிந்தராஜ், சிவராஜ், பார்த்திபன், கோகுல் ஆகியோரை தேடி வருகின்றனர்.