Published : 08 Aug 2022 07:02 AM
Last Updated : 08 Aug 2022 07:02 AM

வேலூர் | ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தற்கொலை

வினோத்குமார்

வேலூர்: மோசடி புகாரில் சிக்கியுள்ள ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தின் ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம், சேவூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரராகவன். இவரது மகன் வினோத்குமார் (28). இவர் வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தில் வேலைசெய்து வந்தார்.

மேலும், தன் பகுதியைச் சேர்ந்த பலரிடம் பணத்தை வாங்கி ஐஎப்எஸ் நிதிநிறுவனத்தில் முதலீடு செய்யும் ஏஜென்ட்டாகவும் இருந்து வந்தார்.

இந்நிலையில், பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் பணத்தை திரட்டிய ஐஎப்எஸ் நிதிநிறுவனத்தில் பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்ததையடுத்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் தலைமறைவாயினர். சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 5-ம் தேதிசென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஐஎப்எஸ் நிதிநிறுவனத்தில் தொடர்புடையவர்கள் வீடுகள், அலுவலகங்களில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் ஆய்வு செய்து வேலூரில் உள்ளஐஎப்எஸ் நிதி நிறுவன அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.

இதையறிந்த காட்பாடி சேவூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் முதலீடு செய்த பணத்தை திருப்பி பெற்றுத் தரவேண்டும் என ஏஜென்ட் வினோத்குமாரின் வீட்டுக்கு சென்று கேட்டு தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த வினோத்குமார் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவலம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று வினோத்குமார் உடலைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடிதத்தில் உருக்கம்

மேலும், தற்கொலை செய்து கொண்ட வினோத்குமார் எழுதி வைத்த கடிதம் ஒன்று காவல் துறையினருக்கு நேற்று கிடைத்தது. அதில், ‘‘ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தில் எனக்கு தெரிந்த பலர் பணம் முதலீடு செய்துள்ளனர். அதற்கான ஆவணங்கள் அனைத்தும் எனது மடிக்கணினியில் உள்ளது.

எனது தொலைபேசி வாட்ஸ்அப்-ல் அதன் முழு விவரம் உள்ளது. என்னை நம்பியவர்களுக்கு எனது முடிவிலாவது, பணம் கிடைக்கட்டும். எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள், அனைத்து ஆவணங்களும் வங்கியில் உள்ளன. போலீஸார் பணத்தை மீட்டு உரியவர்களிடம் கொடுக்க வேண்டும்’’. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, வினோத்குமாரின் வீட்டில் இருந்த பத்திரங்கள், மடிக்கணினி, செல்போன், ஆவணங்கள் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x