

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 27 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
கச்சநத்தம் கிராமத்தில் உள்ள கோயில் விழாவில் மரியாதை செய்வது தொடர்பான பிரச்சினையில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 28-ம் தேதி இரவு ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பைச் சேர்ந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய 3 பேரைக் கொலை செய்தனர். மேலும், 5 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக பழையனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கச்சநத்தத்தைச் சேர்ந்த சுமன், அருண்குமார், சந்திரகுமார் உள்ளிட்ட 33 பேரைக் கைது செய்தனர். இந்தவழக்கில் தொடர்புடைய 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் தலைமறைவானார். 3 சிறுவர்களைத் தவிர்த்து, 27 பேர் மீதான வழக்கு விசாரணை, சிவகங்கை மாவட்ட எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இதற்கிடையில், காயமடைந்த தனசேகரன் என்பவரும், ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு உயிரிழந்தார்.
இந்த வழக்கில் தொடர்புடைய 27 பேரும் குற்றவாளிகள் என்று கடந்த1-ம் தேதி நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், திருச்சி சிறையில் இருந்த முகிலன் மட்டும் சிவகங்கை நீதிமன்றத்துக்கு நேற்று அழைத்து வரப்பட்டார். மற்றவர்களுக்கு காணொலி மூலம் நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார்.
அதில், குற்றவாளிகள் சுமன்(27), அவரது தந்தை சந்திரகுமார்(51), தாயார் மீனாட்சி(44), சகோதரர் அருண்குமார்(25), தாத்தா முத்தையா(64), ராமகிருஷ்ணன்(23), செல்வி(41), சுரேஷ்குமார்(43), சின்னு(71), செல்லம்மாள்(69), ரவி(38), ஆவரங்காட்டைச் சேர்ந்த இளையராஜா(27), கனித்குமார்(23), மைக்கேல் முனியாண்டி (34), ஒத்தகுளத்தான்(44), முத்துச்செல்வன்(24), ராமச்சந்திரன்(42), மாயசாமி(35), மாரநாடைச் சேர்ந்த அக்னிராஜ்(24), ராஜேஷ்வரன்(26), கருப்புராஜா(33), கருப்பையா(33), முத்துமுனீஸ்வரன்(29), வேம்பத்தூரைச் சேர்ந்த முகிலன்(27), கார்த்திக்(23), சிவகங்கை அருகேயுள்ள முத்துப்பட்டியைச் சேர்ந்த அருள்நவீன்(23), மாத்தூரைச் சேர்ந்த மதிவாயன்(25) ஆகிய 27 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், 27 பேருக்கும் மொத்தம் ரூ.13,28,400 அபராதம் விதித்தார். அபராதத் தொகையை உயிரிழந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர், தனசேகரன் ஆகிய 4 பேரின் குடும்பங்களுக்கும், தலா ரூ.3,32,100 வீதம் பிரித்துக் கொடுக்கவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் துஷாந்த் பிரதீப்குமார், சிறப்பு வழக்கறிஞர் சின்னராஜா ஆகியோர் ஆஜராகினர். தீர்ப்பையொட்டி சிவகங்கை நீதிமன்ற வளாகம், கச்சநத்தம், ஆவரங்காடு, மாரநாடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சிறப்பு வழக்கறிஞர் நியமனம்
முன்னதாக, இந்த வழக்கில் 10 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்டோர் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியது. இதனால், சிறையில் இருக்கும் மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்குவது நிறுத்தப்பட்டது.
மேலும், இந்த வழக்கில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது தொடர்பான பொதுநல வழக்கில், அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கறிஞராக சின்னராஜாவை உயர் நீதிமன்றம் நியமித்தது.
தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிறப்பு வழக்கறிஞர் சின்னராஜா, “இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது என்பதற்காகவும், நீதிமன்றத்திலேயே சாட்சிகளை மிரட்டியதாலும் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை கொடுக்கவேண்டும் என்ற வாதத்தை நாங்கள்முன்வைத்தோம். ஆனால், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எங்களுக்குத்திருப்தியில்லை. மேலும், போலீஸ் தரப்பும் திருப்தியாகச் செயல்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வார்கள்” என்றார்.
மேல்முறையீடு செய்ய முடிவு
இதுகுறித்து பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் கூறும்போது, “குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், ஆயுள் தண்டனை கிடைத்துள்ளதால், மேல்முறையீடு செய்ய உள்ளோம்” என்றனர். அதேபோல, தண்டனை பெற்றவர்களின் உறவினர்கள் கூறும்போது, “அப்பாவிகள் பலருக்கும் தண்டனை கிடைத்துள்ளது. இதனால் மேல்முறையீடு செய்ய உள்ளோம்” என்றனர்.