Published : 06 Aug 2022 06:46 AM
Last Updated : 06 Aug 2022 06:46 AM
சென்னை: தம்பி குடிபோதையில் காரை ஓட்டியதால் 3 பேர் உயிரிழந்த வழக்கில், உடன் பயணித்த சகோதரியான பெண் மருத்துவரை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு நவம்பரில் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவரான அன்பு சூர்யா, தனது நண்பர் செபஸ்டியன் கிருஷ்ணன் மற்றும் மருத்துவரான தனதுசகோதரி லட்சுமியுடன் இரவு நேர பார்ட்டி ஒன்றில் பங்கேற்றுவிட்டு, நள்ளிரவு 3 மணி அளவில் மெரினா கடற்கரை வழியாக காரில் வந்தார். அவர், குடிபோதையில் காரை வேகமாக ஓட்டி வந்துள்ளார்.
அப்போது கார் மோதியதில் 2 மீன் வியாபாரிகள் மற்றும் ஒரு தலைமைக் காவலர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்தன.
இதுதொடர்பாக அன்புசூர்யா, மருத்துவர் லட்சுமி, செபஸ்டியன் கிருஷ்ணன் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். விபத்து ஏற்படுத்திய காரில் தான் பயணம் மட்டுமே செய்ததாகவும், நடந்த விபத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக் கூறி, வழக்கில் இருந்து தன்னை விடுக்கும்படி உயர் நீதிமன்றத்தில் மருத்துவர் லட்சுமி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “தனது சகோதரர் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தடுக்காமல் குற்றத்துக்கு லட்சுமியும் உடந்தையாக செயல்பட்டுள்ளார். எனவே, அவர் மீதான வழக்கை ரத்துசெய்யக்கூடாது’’ என அரசுதரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, “குடிபோதையில் ஏற்படும் வாகன விபத்துகளுக்கு ஓட்டுநர் மட்டுமல்ல, அந்த வாகனத்தில் உடன் பயணிப்பவர்களுக்கும் சமமான பொறுப்பு உள்ளது. எனவே, இந்த வழக்கில் இருந்து மருத்துவர் லட்சுமியை விடுவிக்க முடியாது’’ என மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT