புதுச்சேரி | மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரம்: தனியார் பள்ளி முதல்வரை கைது செய்ய வலியுறுத்தல்

புதுச்சேரி | மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரம்: தனியார் பள்ளி முதல்வரை கைது செய்ய வலியுறுத்தல்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி திராவிடர் விடுதலை கழகத் தலைவர் லோகு அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் குமாரன், தமிழர் களம் செயலாளர் அழகர், புதுச்சேரி மாணவர் கூட்டமைப்புத் தலைவர் சாமிநாதன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் தலைவர் பிரகாஷ், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படைத் தலைவர் பாவாடைராயன், இந்திய தேசிய இளைஞர் முன்னணி தலைவர் கலைப்பிரியன் ஆகியோர், டிஜிபி மனோஜ்குமார் லாலை நேற்று சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனு விவரம்: புதுச்சேரி முதலியார்பேட்டை நூறடி சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவிக்கு பள்ளி ஆசிரியர் பாலியல் ரீதியான செய்திகளை வாட்ஸ் அப்பில் அனுப்பிய விவகாரத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர், மாணவிக்கு பாலியல் செய்திகள் அனுப்பியதை அறிந்தவுடன், அந்த ஆசிரியரின் செல்போன் பள்ளி முதல்வரிடம் அங்குள்ளோரால் ஒப்படைக்கப்பட்டு புகார் அளிக்கப்பட்டது.

அப்புகாரின் மீது உரியசட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக பள்ளி முதல்வர் செல்போனில் இருந்த செய்திகளை அழித்துள்ளார். இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இந்நிலையில் குற்றமிழைத்த ஆசிரியரை காப்பாற்றும் நோக்கத்தோடு செல்போனில் இருந்த ஆதாரங்களை அழித்த பள்ளி முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in