

தியாகதுருகத்தில் கருக் கலைப்பு செய்த தனியார் மருத்துவ மனைக்கு சீல் வைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டு எடையார் கிராமத்தைச் சேர்ந்த அம்மாசி மனைவி பெரிய நாயகி என்பவர், தியாகதுருகம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் கருக்கலைப்பு சிகிச்சைக்காக சென்றார். ஆனால் கருக்கலைப்பு சிகிச்சைப் பலனின்றி ஆக.1-ம் தேதி உயிரிழந்துள்ளார்.
இதையறிந்த மாவட்ட நிர்வாகம், முதற்கட்ட விசாரணை மேற்கொள்ள கள்ளக்குறிச்சி சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மற்றும் ஊரக நலப் பணிகள், துணை இயக்குநர் ஆகியோர் அடங்கிய குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
அதனடிப்படையில், இம்மருத்துவமனையானது 1971 -ம் ஆண்டின் மருத்துவ கருத்துகலைப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை. கருக்கலைப்பு மாத்திரைகள் பயன்படுத்தியதில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. மருத்துவ மனையின் அலட்சியப் போக்கும், மருத்துவ சிகிச்சை நெறிமுறைகள் மற்றும் பதிவேடுகளை சரியாக பின்பற்றாதது கண்டறியப்பட்டன.
இதன் அடிப்படையில், தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டம், 1997ன் பிரிவு 4(1)ன் படி, பதிவு ரத்து செய்யப்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி மறு உத்தரவு வரும் வரை பொது நலன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் விஜயபிரபாகரன் தலைமையில் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் சீல் வைக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, உள் நோயாளிகள் விருப்பப்படி சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் மாற்றம் செய்திட மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கருக்கலைப்பு மாத்திரைகள் பயன்படுத்தியதில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. மருத்துவ சிகிச்சை நெறிமுறைகள் மற்றும் பதிவேடுகளை சரியாக பின்பற்றாதது கண்டறியப்பட்டன.