Published : 05 Aug 2022 07:11 AM
Last Updated : 05 Aug 2022 07:11 AM
சேலம்: சேலத்தில், யூ-டியூப் பார்த்து, பிஸ்டல் ரக நாட்டுத் துப்பாக்கி தயாரித்த பொறியியல் பட்டதாரி குறித்து, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
சேலத்தை அடுத்த ஓமலூர் அருகே புளியம்பட்டி என்ற இடத்தில், கடந்த 19-ம் தேதி ஓமலூர் எஸ்.ஐ., அழகுதுரை உள்ளிட்ட போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக, இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் இருவரை போலீஸார் விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர்.
இதையடுத்து, அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தை போலீஸார் சோதனையிட்டனர். அந்த வாகனத்தில், பிஸ்டல் ரகத்தினாலான நாட்டுத் துப்பாக்கிகள் 2, துப்பாக்கி வெடிமருந்து உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் சேலம் சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி (25), சேலம் செவ்வாய்பேட்டை மரமண்டி பகுதியைச் சேர்ந்த சஞ்சய் பிரகாஷ் (24) என்பது தெரியவந்தது. பொறியியல் பட்டதாரிகளான அவர்கள், யூ-டியூப்-ஐ பார்த்து, துப்பாக்கி தயாரித்ததும், விடுதலைப் புலிகள் இயக்கத்தைப்போல, தாங்களும் ஒரு இயக்கத்தைத் தமிழகத்தில் தொடங்க விரும்பியதாகவும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் இருந்த துப்பாக்கிகள், வெடிமருந்து, இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, வழக்கு க்யூ பிராஞ்ச் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் விசாரணை நடத்தினர். மேலும், துப்பாக்கி தயாரிப்பதற்காக சேலம் செட்டிச்சாவடி பகுதியில் அவர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஆயுத சட்டம், வெடிபொருள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, வழக்கு விவரங்கள் என்ஐஏவுக்கு அனுப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து, என்ஐஏ அதிகாரிகள் குழு, ஓமலூர் காவல் நிலையத்துக்கு நேற்று வந்தனர். அவர்கள், இளைஞர்கள் இருவரை கைது செய்த போலீஸாரிடம் வழக்கு தொடர்பான விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT