

சென்னை: சென்னையில் உள்ள கால் நடைமருத்துவக் கல்லூரி மாணவிகள் விடுதியில் இரு மாணவிகள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். இரவு தாமதமாக விடுதிக்கு வந்தது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததால், இந்த விபரீத முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
சென்னை வேப்பேரியில் உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே மாணவிகள் விடுதியும் உள்ளது. இக்கல்லூரியில் மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த மாணவியும், வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த மாணவியும் இரண்டாமாண்டு படித்து வருகின்றனர்.
இருவரும் அங்குள்ள விடுதியிலேயே தங்கியிருந்தனர். இந்நிலையில், இருவரும், மருத்துவக் கல்லூரி ஆய்வகத்தில் உள்ள ரசாயனப் பவுடரை நேற்று முன்தினம் சாப்பிட்டுள்ளனர். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட இருவரையும் பிற மாணவிகள் மீட்டு, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது தொடர்பாக மருத்துவமனை அளித்த தகவலின்பேரில், பெரியமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
தற்கொலைக்கு முயன்ற இரு மாணவிகளும் ஒரு மாதத்துக்கு முன் வெளியில் சென்றுவிட்டு, விடுதிக்கு தாமதமாக வந்துள்ளனர். இதைப் பார்த்த விடுதி வார்டன்கள் இருவரையும் கண்டித்து, எச்சரித்துள்ளனர். மேலும், மாணவிகளின் பெற்றோருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் இரு மாணவிகளின் பெற்றோரும், அவர்களைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல, இரு மாணவிகளுடன் படிக்கும் பிற மாணவிகளும், அவர்களை தவறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த இரு மாணவிகளும், தங்களுக்கு வாழப் பிடிக்கவில்லை என்று கூறி வந்துள்ளனர். மேலும், மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இரு மாணவிகளும் தற்கொலை முடிவுக்குச் சென்றிருக்கலாமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறும்போது, “மாணவிகள் தாமதமாக வந்ததால், வார்டன் கேள்வி கேட்டிருக்கிறார். அதனால்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த மாணவிகளிடம் வாக்குமூலம் பெற்று, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவிகள் கடிதம் எதுவும் எழுதி வைத்துள்ளார்களா என்பது குறித்துவிசாரிக்க வேண்டும்” என்றார்.