Published : 04 Aug 2022 04:40 AM
Last Updated : 04 Aug 2022 04:40 AM

ஸ்ரீபெரும்புதூர் அருகே நிலமோசடி வழக்கில் டிஆர்ஓ, வட்டாட்சியர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே நடந்த நிலமோசடி வழக்கு தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர், 2 வட்டாட்சியர்கள், சார்பதிவாளர், நில அளவையர் ஆகிய 5 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடகால், வல்லம் மற்றும் பால்நல்லூர் ஆகிய கிராமங்களில் விஜிபி நிறுவனத்தால் வினோத் நகர் என்ற பெயரில் வீட்டுமனை பிரிவுகள் அமைக்கப்பட்டது. அந்நிறுவனத்தின் பங்குதாரர், மேற்கண்ட மனைப் பிரிவுகளின் பொது உபயோகத்துக்கான சுமார் 16.64 ஏக்கர் நிலத்தை, கடந்த 1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்திடம் ஒப்படைத்து, அதற்கான பத்திரத்தை ஆணையரிடம் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், அந்த நிலத்தை அமலதாஸ் ராஜேஷ் என்பவர் மோசடி செய்து விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி, அமலதாஸை சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து, பொது உபயோகத்துக்காக வழங்கப்பட்ட நிலத்தை ரத்து செய்வதற்கு உடந்தையாக செயல்பட்டதாக கூறி அப்போது சிப்காட் நிலஎடுப்பு மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த ராஜேந்திரன் (தற்போது சென்னை இந்து சமய அறநிலையத் துறையின் மாவட்ட வருவாய் அலுவலர்), அவருக்கு உறுதுணையாக இருந்த காஞ்சிபுரம் இணை பதிவாளர் ராஜதுரை, காஞ்சிபுரம் நிலஎடுப்பு பிரிவு வட்டாட்சியர் எழில்வளவன், ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் பார்த்தசாரதி, உதவியாளர் பெனடின் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவர்கள் மீது 11 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 5 பேரும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் மோசடி செய்ததாக கூறப்படும் நிலத்தின் மதிப்பு ரூ.30 கோடி என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x