

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மனைவி பாரிஜாதம்(57). குழுவாக ஆன்மிகச் சுற்றுலா செல்ல விரும்பினார்.
இதற்காக இணையதளத்தில் கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட வடமாநில சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்வோரின் அறிவிப்பை பார்த்து, அவர்களை தொடர்பு கொண்டார்.
இதையடுத்து 90 பேரை ஏற்பாடு செய்து 2 ரயில் பெட்டிகளில் பதிவு செய்வதற்காக 2 தவணைகளாக ரூ.4 லட்சத்து 800-ஐ அவர்களிடம் பாரிஜாதம் செலுத்தினார்.
அதன்பின்னர் சுற்றுலா ஏற்பாடு செய்தோரிடம் இருந்து, முறையான பதில் இல்லாததால் தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ரெங்கநாயகியிடம் பாரிஜாதம் புகார் கொடுத்தார்.
இதன்பேரில் 4 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் சென்னையைச் சேர்ந்த அனந்தபத்மநாபனின் மனைவி ஹேமாமாலினி(47), மும்பையைச் சேர்ந்த வெங்கட்ரமணன்(60) என்பவருடன் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 6 போன்கள், 12 ஏடிஎம்.கார்டுகள், ரூ.4 லட்சத்து 36 ஆயிரத்து 800-ஐ பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.