

திருவள்ளூர்: திருவேற்காட்டில் தனியார் செவிலியர் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் நேற்று கல்லூரிக்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவம் நடந்த விடுதி அறையில் சோதனையிட்டு தடயங்களைச் சேகரித்தனர்.
திருவேற்காட்டில் செயல்பட்டு வரும் தனியார் செவிலியர் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் நர்சிங் படித்து வருகின்றனர். இக்கட்டிடத்தின் கீழ்தளத்தில் கல்லூரியும் மேல் தளத்தில் விடுதியும் செயல்பட்டு வருகிறது.
இங்கு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் 2-ம் ஆண்டு செவிலியர் படிப்பு படித்து வந்தார். இரு தினங்களுக்கு முன்பு காலை வகுப்புக்குச் சென்ற மாணவி மதிய உணவுக்காக தோழிகளுடன் விடுதிக்கு வந்தார். பிறகு, அவர் தோழிகளை சாப்பிடச் செல்லுமாறு கூறிவிட்டு தன் அறைக்குச் சென்றார்.
நீண்ட நேரமாகியும் உணவருந்த வராததால் அவரது தோழிகள் விடுதி அறைக்குச் சென்று பார்த்தபோது, அறை கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, அவர்கள் கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது, அங்கு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த திருவேற்காடு போலீஸார் சம்பவ இடம் விரைந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவியின் பெற்றோர், சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்ததால் தகவலறிந்து கல்லூரிக்கு விரைந்து வந்தனர். அவர்கள், மரணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். கல்லூரிக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பூந்தமல்லி வட்டாட்சியர் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் வந்து விசாரணை செய்தனர்.
தொடர்ந்து, திருவேற்காடு போலீஸார் விசாரணை நடத்தி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். மேலும் உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, டிஜிபி சைலேந்திரபாபுவின் உத்தரவின்பேரில், இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து சிபிசிஐடி டிஎஸ்பி செல்வகுமார் தலைமையில் 2 ஆய்வாளர்கள் உட்பட 5 போலீஸார் நேற்று சம்பவம் நடந்த நர்சிங் கல்லூரிக்குச் சென்று மாணவி தற்கொலை செய்து கொண்ட அறையில் சோதனை மேற்கொண்டு தடயங்களைச் சேகரித்தனர். இதுதவிர திருவேற்காடு காவல் நிலையத்தில் இருந்த வழக்குப் பதிவு தொடர்பான ஆவணங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், நேற்று முதல் ஒரு வாரத்துக்கு கல்லூரிக்கு விடுமுறை அளிப்பதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. இதனால், விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.