

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, தாம்பரம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 75 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு அனுமந்தபுத்தேரி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஷ்யாம். இவர் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்கள் தங்களது குடும்பத்துடன் நேற்று முன்தினம் திருப்பதி சென்றிருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 62 பவுன் நகைகள், 8 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.46 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸார் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். கொள்ளையடுத்த நபர்களை தேடி வருகின்றனர்.
13 பவுன் திருட்டு
தாம்பரம் சி.டி.ஓ காலனி அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சஜேஷ்குமார். மென்பொருள் பொறியாளரான இவர் மனைவி, குழந்தைகளுடன் கடந்த சனிக்கிழமை உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார்.
இந்நிலையில், நேற்று காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சஜேஷ்குமாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது 13 பவுன் நகை, 10 ஆயிரம் ரொக்கமும் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனமும் திருடுபோய் இருந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், தாம்பரம் போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.