

ஆம்பூர்: தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த புகாரில் ஆம்பூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை மசூதி தெருவைச் சேர்ந்தவர் மீர் அனாஸ் அலி (22). இவர், ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட சில இயக்கங்களை மீர் அனாஸ் அலி ஆதரித்து வந்ததாகவும், அந்த இயக்கங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, திருச்சி மத்திய உளவுப் பிரிவு (ஐபி) போலீஸார் நேற்று முன்தினம் ஆம்பூருக்கு வந்து நகர காவல் நிலையத்தில் வைத்து மீர் அனாஸ் அலியிடம் விசாரணை நடத்தினர்.
அதில், மீர் அனாஸ் அலி வெளிநாட்டு சிம்கார்டு பயன்படுத்தி வெளிநாட்டில் உள்ளவர்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை ஆம்பூரில் இருந்து வேலூர் மாவட்டம் அணைக்கட்டு காவல் நிலையத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து, அங்கு சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
திருச்சி, வேலூர், சென்னை பகுதிகளைச் சேர்ந்த மத்திய உளவுப் பிரிவு போலீஸார் 3 குழுக்களாக மீர் அனாஸ் அலியிடம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, மீர் அனாஸ் அலி பயன்படுத்திய விலை உயர்ந்த வெளிநாட்டு செல்போன்கள், மடிக்கணினி, சிம் கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதிலிருந்த தகவல்களின் அடிப்படையில் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் மீர் அனாஸ் அலி தொடர்பில் இருந்ததும், வெளிநாடுகளில் இருந்து செயல்படும் இஸ்லாமிய இயக்கங்களின் முகநூல் பக்கம், இன்ட்ஸ்கிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு, அவர்களது பதிவுகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவற்றை விரும்பியும், பகிர்ந்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து இந்தியாவில் முக்கிய பிரமுகரை கொலை செய்ய திட்டம் தீட்டி அதற்கான ஆயுதங்களை அவர் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, மத்திய உளவுப் பிரிவு போலீஸார் மீர் அனாஸ் அலி மீது 121, 122, 125 IPC, 18, 18A, 20, 38, 39 ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து ஆம்பூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர்.