Published : 01 Aug 2022 06:56 AM
Last Updated : 01 Aug 2022 06:56 AM
பூந்தமல்லி: திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு- மாதிராவேடு சாலை பகுதியில் தனியார் செவிலியர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி கட்டடத்தின் கீழ் தளத்தில் கல்லூரியும், மேல் தளத்தில் விடுதியும் செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியில் 2-ம் ஆண்டு பயின்று வந்த மாணவி ஒருவர் நேற்று முன்தினம் வகுப்பு முடிந்த பிறகு வழக்கம் போல் மதிய உணவுக்காக விடுதிக்கு வந்தார்.
நீண்ட நேரமாகியும் அவர் உணவருந்த வராததால், சந்தேகமடைந்த அவரது தோழிகள் விடுதி அறைக்கு சென்று பார்த்தபோது, அறை கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது, அங்கு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.
திருவேற்காடு போலீஸார் மாணவியின் உடலை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த பெற்றோர் கல்லூரிக்கு விரைந்து வந்தனர். மகளின் மரணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
பூந்தமல்லி வட்டாட்சியர் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, திருவேற்காடு போலீஸார் விசாரணை நடத்தி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, டிஜிபி சைலேந்திரபாபுவின் உத்தரவின் பேரில், சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டு, சிபிசிஐடி டிஎஸ்பி செல்வகுமார் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவியின் பெற்றோர், விடுதியில் உள்ள சக மாணவிகள் உள்ளிட்டோரிடம் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே மாணவியின் உடல் நேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அசம்பாவிதம் ஏதுவும் நிகழாமல் தடுக்க கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT