Published : 31 Jul 2022 04:05 AM
Last Updated : 31 Jul 2022 04:05 AM

லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஓட்டுநர், நடத்துநர் உயிரிழப்பு: பெரம்பலூரில் பயணிகள் 11 பேர் காயம்

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே நேற்று லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில், பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் உயிரிழந்தனர். 11 பயணிகள் காயமடைந்தனர்.

சென்னையிலிருந்து நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு அரசுப் பேருந்து புறப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் எறையூர் சர்க்கரை ஆலை அருகே சின்னாறு பகுதியில் நேற்று அதிகாலை சென்றபோது, முன்னால் இரும்புக் குழாய்கள் ஏற்றிச் சென்ற லாரி மீது அரசுப் பேருந்து மோதியது. சென்னை-திருச்சி வழித்தடத்தில், சாலையின் இடதுபுறத்தில் சென்று கொண்டிருந்த லாரியை முந்த முயன்றபோது, லாரி திடீரென சாலையின் வலதுபுறத்துக்கு மாறியதால், உடனடியாக பேருந்தை நிறுத்த முடியாமல் இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில், அரசுப் பேருந்து ஓட்டுநரான திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் பெருவளப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் மகன் தேவேந்திரன்(48), பேருந்து நடத்துநரான அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் அய்யப்பநாயக்கன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவப்பிரகாசம் மகன் முருகன்(56) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பேருந்து பயணிகள் 11 பேர் காயமடைந்தனர்.

பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த பயணிகள் அனைவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநரான திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் ஆய்க்குடி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் பாலனிடம்(49) மங்களமேடு போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x