Published : 30 Jul 2022 06:35 AM
Last Updated : 30 Jul 2022 06:35 AM

கோவை | மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: மூன்று ஆசிரியர்கள் கைது

கோவை/பொள்ளாச்சி: கோவை குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றியவர் பிரபாகரன் (58). இவர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பாதிக்கப்பட்ட மாணவிகள் அவர்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.

ஆத்திரமடைந்த பெற்றோர் நேற்று காலை பள்ளி முன்பு திரண்டனர். ஆசிரியர் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்து வந்த குனியமுத்தூர் போலீஸார் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 5 மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்துள்ளதாகவும், இதுதொடர்பாக தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் பெற்றோர் தெரிவித்தனர்.

இதையடுத்து போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் ஆசிரியர் பிரபாகரன் மீது போலீஸார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து ஆசிரியர் பிரபாகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்கும்படி போலீஸாருக்கும், வருவாய் கோட்டாட்சியருக்கும் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

பொள்ளாச்சி அருகே உள்ள பள்ளியில் தாவரவியல் ஆசிரியராக பொள்ளாச்சியை சேர்ந்த பாலசந்திரன் (43), இயற்பியல் ஆசிரியராக கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (46) ஆகியோர் பணிபுரிகின்றனர். இருவரும், அப்பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அப்பள்ளியில் நடந்த போக்ஸோ சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பிறகு, தனக்கு நேர்ந்து வரும் பாலியல் துன்புறுத்தல் குறித்து 1091 என்ற எண்ணிலும், அதன் பின் 181 என்ற எண்ணிலும் மாணவி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, அந்த மாணவியிடம் குழந்தைகள் நல அலுவலர் விசாரித்துள்ளார். இதையடுத்து, நேற்று பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தம்பதி கைது: நெகமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (31). இவர், பொள்ளாச்சியில் தனியார் பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவியிடம், தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் மாணவியை கன்னியப்பனின் மனைவி மகாலட்சுமி தாக்கியுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து தம்பதியை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x